March 4, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை பொதுமக்களாக கணக்கெடுக்கமுடியாது: அமைச்சர் சரத் வீரசேகர- பிரத்தியேக செவ்வி

1 min read

(நேர்காணல் -ஆர்.யசி )
30/1 பிரேரணையை  நாம் ஏற்றுக்கொண்டால் யுத்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும். ஐ.நா.பிரேரணையிலிருந்து விடுபட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் சார்பில் புதிய பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளது.

ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கிடைக்காது போகலாம். பொது இடங்களிலோ அல்லது பாராளுமன்றத்திலோ விடுதலைப்புலிகலையோ, பிரபாகரன் பற்றியோ பேச முடியாது என்ற சட்டம் விரைவில் எமது உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு இல்லை. 

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்தில் பொது மக்கள் இலக்குவைக்கப்படவில்லை. எனவே யுத்த  குற்றங்கள்  இடம்பெறவில்லை இன்னொரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்திற்கு ஒப்பான ஆயுத போரட்டத்தில் எதிரான போராளிகளை  கொல்ல முடியும். தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பொதுமக்ககளை பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திற்கே உள்ளது என்ற தர்க்கத்தை இம்முறை ஜெனிவாவில் முன்வைப்போம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அவருடனான செவ்வி முழுமையாக, 

கேள்வி :-  நிறைவேற்றப்பட்ட 30.1 ஜெனிவா தீர்மானத்தினை ஏற்றுக்கொள்வதில் அரசாங்கம் ஏன் பின்வாங்குகின்றது? 
பதில்:- ஜெனிவா தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இல்லை, உண்மையில் தீர்மானத்தினை நிராகரிப்பதாக நாம் எடுத்த முடிவே மிகச் சரியானதாகும். இலங்கை மக்களின் ஆணைக்கு முரணானதும் அரசாங்கத்தின் அனுமதியோ, அமைச்சரவை அனுமதியோ, பாராளுமன்றதின் அனுமதியோ இல்லாத ஒரு தீர்மானத்தினை எவ்வாறு அரசாங்கம் அங்கீகரிப்பது. ஆகவே 30.1 தீர்மானத்தினை பிரேரணையை ஏற்றுக்கொள்வது ஜனநாயகத்தை மீறும் செயலாகும். பிரேரணையை நாம் ஏற்றுக்கொண்டால் யுத்த குற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டதாகிவிடும். யுத்த குற்றமொன்று இலங்கையில் இடம்பெறவில்லை. இல்லாத ஒன்றை ஏற்றுக்கொண்டு நாட்டின் சுயாதீனத்தையும், இறைமையையும் பலவீனப்படுத்த அனுமதிக்க முடியாது. 

கேள்வி:- அப்படியென்றால் ஐ .நாவில் இம்முறை அரசாங்கம் முன்னெடுக்கும் நகர்வுகள் என்ன? 
பதில்:- முதலாவதாக, 30.1 பிரேரணையை நிராகரிப்போம். அதேபோல் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  முன்வைக்கவுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக நிராகரிப்போம். இலங்கையில் யுத்த குற்றம் இடம்பெறவில்லை என்ற உறுதியான கூற்றை அரசாங்கம் முன்வைக்கும். அதேபோல்  இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மொசடோனியா, மொண்டிகிரீடோ ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றினை கொண்டுவரவுள்ளனர். இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.  இலங்கைக்கு இன்று உறுதியான தலைமைத்துவமொன்று கிடைத்துள்ளது, எந்தவித அச்சமும் இல்லாது நாட்டினை முன்னெடுத்து செல்லக்கூடிய, சர்வதேச அழுத்தங்களை சமாளிக்கக்கூடிய, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய அரசாங்கம் அமைந்துள்ளது. எனவே மனித உரிமைகள் பேரவை  எமக்கு எதிராக முன்னெடுக்கும் நகர்வுகளை நிறுத்த வேண்டும், எமது சுயாதீனத்தில் தலையிடக்கூடாது என்று இம்முறை கூறுவோம். அதேபோல் இந்த பிரேரணையில் இருந்து முற்றுமுழுதாக விடுபட எமக்கு முதல் முறையாக வாய்ப்பொன்று கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பினை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவே பார்க்கின்றோம். 

கேள்வி:- அரசாங்கத்தின் சார்பில் பிரேரணை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக கூறினீர்களே, அதற்கான வாய்ப்புகள் உள்ளதா? 
பதில்:-  இலங்கையின் சார்பில் புதிய பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளது. ஐந்து நாடுகள் கொண்டுவரும் பிரேரணையை நிராகரித்து இலங்கை இம்முறை  சார்பில் பிரேரணை ஒன்றினை முன்வைக்கலாமா என ;று அமைச்சரவையிலும் ஆராய்ந்து வருகின்றோம். ஆனால் அவ்வாறு நாம் பிரேரணை ஒன்றினை முன்வைத்தால் அதற்கு ஆதரவாக நாடுகளை இணைத்துக்கொள்ள வேண்டும். அது சாதாரண காரியம் அல்ல. எனினும் சர்வதேச நாடுகளின் ஆதரவை நாம் கேட்போம். 30.1 பிரேரணையை ஆதரித்த நாடுகளை விடவும் அதனை எதிர்த்த மற்றும் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்ட நாடுகளின் எண்ணிக்கையே அதிகமாகும். எனவே அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை முன்னெடுப்போம். 

கேள்வி:- யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமித்தாரே, இவ்வாறான குழுக்களை நியமித்து உங்களால் மனித உரிமைகள் பேரவையை சமாளிக்க முடியுமா? 
பதில்:- நாம் யுத்த குற்றத்தில் ஈடுபடவில்லை என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால்  பிரபாகரனுக்காக எம்மை பழிவாங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். முற்றுமுழுதாக எம்மை சுற்றி சூழ்ச்சியே இடம்பெற்று வருகின்றது. அவ்வாறு இருக்கையில் நாம் எந்த முயற்சிகளை எடுத்தாளும் எம்மை நிராகரிக்கவே செய்வார்கள். எமக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய விசாரணை பொறிமுறை ஒன்றினை முன்னெடுக்க இடமளிக்கவே இல்லை. எப்படியேனும் சர்வதேச விசாரணைக்குள் நாட்டை தள்ள வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். ஆகையால் நாம் என்னதான் ஆணைக்குழுக்களின் மூலமாக சிறந்த வேலைத்திட்டங்களை உருவாக்கிக்காட்டினாலும் ஐக்கிய நாடுகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச விடுதலைப் புலிகள் சார்பு நாடுகளின் நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் மாறப்போவதே இல்லை. 

கேள்வி :– மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் சர்வதேச அரங்கில் சமர்பிக்கப்பட்ட காரணத்தில்தானே மனித உரிமை பேரவையின் கீழ் இலங்கைக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன?

பதில் :- இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு ஆயுதப்போராட்டத்தை ஆராய சர்வதேச மனித உரிமைகளின் சட்டத்தின் கீழ் எம்மை கொண்டுசெல்ல முடியாது.  இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையாக அல்லாது ஆனால் இன்னொரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்திற்கு ஒப்பான ஆயுத போராட்டமாகவே இலங்கை யுத்தம் இடம்பெற்றது. இங்கு விடுதலைப்புலிகளுக்கு இராணுவ கட்டமைப்பொன்று இருந்தது, இராணுவ சீருடை இருந்தது, கடற்படை, விமானப்படைகள் இருந்தன, தமக்கான தேசமொன்று அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, தொடர்ச்சியாக இராணுவத்துடன் போராடக்கூடிய தன்மையும் அவர்களிடம் இருந்தது. இவ்வாறெல்லாம் புலிகள் இருந்தனர் என நாம் மட்டும் கூறவில்லை, தருஸ்மான் அறிக்கையிலும், அல்லது செயிட் அல் ஹ{சைன் முன்வைத்த அறிக்கையிலும் இந்த விடயங்கள்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே மனித உரிமைகள் பேரவையின்  நெறிமுறை இரண்டில் “இன்னொரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்திற்கு ஒப்பான ஆயுத போரட்டத்தில் போராளிகளை கொல்ல முடியும்.  தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பொதுமக்ககளை பாதுகாக்கும் பொறுப்பு தமது இராணுவத்திற்கே உள்ளது என கூறப்படுகின்றது. 

எனவே பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் கூட அது இராணுவத்தின் மீது பழிசுமத்தும் விதமாக அமையாது. இம்முறை மனித உரிமைகள் பேரவையில் நாம் இந்த காரணிகளை முக்கிய தர்க்கமாக முன்வைக்கவுள்ளோம். இந்த போராட்டம் குறித்து மனிதாபிமான சட்டம்  நடைமுறைப்படுத்தப்படுமே தவிர மனித உரிமை மீறல் சட்டமல்ல. மனிதாபிமான சட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவருமே புலிகள் என்றே கருதப்படும். அவ்வாறு இருக்கையில் யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவருமே புலிகளே தவிர பொதுமக்கள் அல்ல என்ற எமது தர்க்கத்தை முன்வைப்போம். எமது பக்க நியாயத்திற்கு ஆதரவான நாடுகளை திரட்டிக்கொள்ளவும் முயற்சிப்போம். 

கேள்வி:– அப்படியென்றால் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை நீங்கள் கருத்தில் கொள்ளப்போவதே இல்லையா? 
பதில்:- மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையுடன் நாம் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் எமக்கு இல்லை. மனித உரிமைகள் பேரவை கூறும் விடயங்கள்  அனைத்தையும் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. இலங்கை சுயாதீன ஜனநாயக நாடாகும். இங்கு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்னமும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவற்றை நாம் தேசிய பொறிமுறை ஒன்றினூடாக  நிறைவேற்றுவோம். இந்த விடயங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியம் இல்லை. 

கேள்வி:- உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் நடக்கவே இல்லை என கூறுமளவிற்கு உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா? 

பதில்:– எவ்வித இழப்பும் ஏற்படுத்தப்படாத யுத்தமாகவே (zero casualty concept) இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். (zero casualty concept) என்பது பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை என்பதல்ல, இந்த யுத்தத்தில் பொதுமக்களை நாம் இலக்கு வைக்கவில்லை என்பதே இந்த வார்த்தையின் அர்த்தமாகும். 

இது சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறைமையாகும். எனவே இழப்புகள் எதுவுமே இல்லாத யுத்தத்தையே நாம் நடத்தி முடித்தோம். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம்பெறவில்லை என்ற சர்வதேச நிபுணர்களின் அறிக்கையும், அதற்கான சான்றுகளும் உள்ளன. 

மனிதாபிமான ரீதியில், பொதுமக்களை  மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது இராணுவம் யுத்தத்தை நடத்தியது. மிக முக்கிய உதாராணமாக கூறுவதென்றால், யுத்தம் முடிவடைய சில தினங்களுக்கு முன்னர் பிரபாகரன் நந்திக்கடல் கலப்பில் பொதுமக்களை பணயம் வைத்து தப்பிக்க நடவடிக்கை எடுத்த போது, எம்மால் பாரிய ஆயுதங்களை பயன்படுத்தி இலகுவாக அவர்களை அழித்திருக்க முடிந்தது. 

ஆனால் ஒருபோதும் நாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தாது பொதுமக்களை பாதுகாத்து பிரபாகரனையே அழித்தோம். அதேபோல் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்டோம். கர்ப்பிணிப்பெண்கள், சிறுவர்கள், அங்கவீனர்கள், காயமடைந்தவர்கள் எனப்  பலரை நாம் மீட்டோம். இதுதான் zero casualty  யுத்தமாக கூறப்பட்டது. இந்த யுத்தத்தில் பொது மக்கள் இலக்குவைக்கப்படவில்லை. எனவே போர் குற்றங்களாக இதனை கருத முடியாது. 

கேள்வி:-இந்த யுத்தத்தில் பொதுமக்கள், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று  நவநீதம் பிள்ளை, ஸ்டீபன் ராப் போன்றவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர், இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக  கூறப்படுகின்றதே? 
பதில்:- இவர்களின் பின்னணி என்னவென்பதே எமது கேள்வியாகும், நாம் திட்டமிட்ட போர் குற்றங்களில் ஈடுபடவில்லை. இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. தருஸ்மான் அறிக்கையில் தான் இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் யுத்தத்தில் அண்ணளவாக எட்டாயிரம் பொதுமக்கள் இறந்திருக்கலாம். 

கேள்வி :- எட்டாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்றாலும் அதுவும் குற்றமாக கருதப்படாதா? 
பதில்:- இழப்புகள் இல்லாத யுத்தம் உலகில் எங்காவது இடம்பெற்றுள்ளதாக கூற முடியுமா,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அவ்வாறான ஒரு யுத்தத்தை அடையாளம் காட்ட முடியுமா, இழப்புகள் தமிழர் தரப்பில் மட்டுமே காணப்படவில்லை, சிங்களவர்களும் உயிரிழந்தனர். போர் குற்றங்கள் என பார்த்தல் புலிகளையே தண்டிக்க வேண்டும். இந்த யுத்தத்தில் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்டுள்ளோம். யுத்தமொன்றில் அதிகளவில் பொதுமக்களை மீட்ட ஒரே சந்தர்ப்பம் இதுவாகும். அப்படி இருந்தும் மங்கள சமரவீர 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தில், நாம் போர் குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொண்டார். அரசாங்கமே தமது இராணுவத்தை போர் குற்றவாளிகள் என ஏற்றுக்கொண்ட முதல் சம்பவமாகவும் இது இருக்குமென நான் நினைக்கின்றேன். 

கேள்வி:- அப்படியென்றால் மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்து உங்களின் நிலைப்பாடதான் என்ன? 

பதில் :- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உண்மையிலேயே மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை, மாறாக அமெரிக்காவின் அரசியலை அரங்கேற்றுகின்றனர். இலங்கை போன்ற சிறிய நாடுகளிடம் அவர்களின் வீரத்தை காட்டுவார்கள், ஆனால் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து ஏன் எவரும் வாய் திறக்கவில்லை. எனவே இந்த சூழ்ச்சியில் நாம் சிக்கக்கொள்ளப்போவதில்லை. 

கேள்வி :- போர் குற்றங்கள் மட்டுமல்லாது நிகழ்கால மனித உரிமை மீறல்கள் குறித்தும் இம்முறை ஐ.நாவில் நெருக்கடிககள் ஏற்படலாம்  எனக் கருதவில்லையா? 

பதில் :- முஸ்லிம்களின் தகனம் குறித்த விடயம், ஏனைய சில சம்பவங்கள் குறித்தும் அவர்கள் அறிக்கையிட்டுள்ளனர். முஸ்லிம்களின் விவகாரத்தில் எமக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கிடைக்காது போகலாம்.அதற்காக என்ன செய்வது, கொரோனா விடயத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க முடியாது. கொரோனா குறித்து ஆராயும் விசேட சுகாதார குழுவே எமக்கும் இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அதனை மீறி நாம் செயற்பட்டால் நாட்டில் ஏதேனும் நெருக்கடி நிலைமைகள் ஏற்படும்போது  அரசாங்கத்தின் மீதே அனைவரும் பழி சுமத்துவார்கள். இந்த விடயத்தில் முஸ்லிம்கள் மனதளவி வருத்தப்படுவார்கள் என்பது எமக்கும் தெரியும். ஆனால் எமக்கு மாற்று வழிமுறை இல்லை. 

கேள்வி:- காணமால் போனோரை கண்டறியும் அலுவலகம் வேண்டாம் என நீங்கள் கூறுவது நியாயமானதா? 
பதில் :- ஆம், காணமால் போனவர்கள் குறித்த அலுவலனம் மூலமாக இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட எவருக்கும் உதவி செய்வதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் நாட்டை நாசமாக்கியவர்களுக்கும் அதே சலுகைகளை கொடுக்க வேண்டுமா. விடுதலைப்புலிகளின்  தாக்குதலில் பாதிக்கப்பட்ட எவரும் நியாயம் கேட்கலாம், நிவாரணம் கேட்கலாம், ஆனால் அந்த குற்றத்திற்கு காரணமானவர்களே நிவாரணம் கேட்பதில் நியாயம் உள்ளதா. விடுதலைப்புலிகளுக்கு ஒருபோதும் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்காது. எனவே இந்த அலுவலகம் மூடப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. 

கேள்வி :- தொடர்ச்சியாக நாடு பிளவுபட்டு நிக்க இந்த பாகுபாடே பிரதான காரணமாக உள்ளதென கூறுவதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 
பதில் :- ஜேர்மனியில் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் எந்தவொரு இடத்திலும் ஹிட்லர் பற்றியோ,நாசிகள் பற்றியோ பேச உரிமையில்லை. அவ்வாறு பேசினால் அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இலங்கையிலும் இதே நிலைமையை உருவாக்க நாம் தீர்மானித்துள்ளோம். இலங்கையில் பொது இடங்களிலோ அல்லது பாராளுமன்றத்திலோ விடுதலைப்புலிகள் பற்றியும் பிரபாகரம் பற்றியும் பேச முடியாது என்ற சட்டத்தை நான் கொண்டுவரவுள்ளேன். அவ்வாறு பேசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும். இது குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஜெர்மனியில் உள்ளதை போலவே இலங்கையிலும் இவ்வாறான சட்டங்கள் அவசியம். பிரபாகரன் சுதந்திர போராட்ட வீரன் அல்ல, விடுதலைப்புலிகள் எப்போதுமே சர்வதேச நாடுகளின் தேவைக்காக நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள். பயங்கரவாதிகள் என சர்வதேச நாடுகளே தடைசெய்த ஒரு இயக்கம். உண்மையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே போர் குற்றங்களை கொண்டுவர வேண்டும். ஆனால் அவர்கள் எமது இராணுவத்தை போர் குற்றவாளிகள் என்கின்றனர். 

கேள்வி:- புதிய அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்திற்கு என்ன நடக்கும்?
பதில் :– என்னைப்பொறுத்தவரை 13 ஆம் திருத்தம் அவசியமில்லை, இந்தியாவின் அழுத்தங்களின் காரணமாகவே எமக்கு 13 ஆம் திருத்தம் திணிக்கப்பட்டு மாகாணசபை முறைமைகள் உருவாக்கப்பட்டது. எமக்கு உண்மையில் அவசியமற்ற ஒரு முறைமையாகவே இதனை பார்க்கிறோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அவ்வாறு இருக்கையில் ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது சட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியுமா, மாகாணசபை முறைமையை நீக்குவதே எமது நோக்கமாகும். இந்தியாவின் திணிப்புகள் எமக்கு அவசியமில்லை. இலங்கை சுயாதீனமான நாடே தவிர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக கருத முடியாது, எனவே எமது உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு இல்லை. இப்போதும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ஆராயப்படுகின்றது. அதில் மாற்றங்கள் அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.