திரவமாக்கப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

தலங்கம – பெலவத்த பகுதியில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ‘ஹேஸ் ஒயில்’ எனப்படும் போதைப்பொருள் அடங்கிய 6 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலவத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ‘ஹேஸ் ஒயில்’ எனப்படும் போதை எண்ணைய் அடங்கிய 6 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சா போதைப் பொருளை ‘கெரபிசெட்வா எல்’ எனப்படும் திரவமாக மாற்றி அதனை ‘ ஹேஸ் ஒயில்’ என்று விற்பனை செய்து வந்துள்ளதுடன், இந்த ஆறு போத்தல்களுக்கான ஹேஸ் ஒயிலை தயாரிப்பதற்காக 609 கிராம் கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை , அண்மைக் காலமாக கஞ்சா போதைப்பொருள் மற்றும் ஐஸ் போன்ற செயற்கையான போதைப்பொருட்களை திரவமாக மாற்றி கடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் பொதுமக்கள் 118 , 119 மற்றும் 1997 என்ற இலக்கங்களை தொடர்புக் கொண்டு பொலிஸாருக்கு தெரிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.