சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – கமல் குணரத்ன

(எம்.மனோசித்ரா)
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்படுவார்கள்.
போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக, அவர்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புவதற்கான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் அங்குரார்பன நிகழ்வின் போது இதனைத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறுகையில் ,
ஒரு போதைப் பொருளற்ற நாட்டாக முன்னோக்கி செல்வது இலேசான பாதையாக அமையப்போவதில்லை. போதைப்பொருளுக்கு அடிமையான அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க இதுபோன்ற எட்டு கட்டிட தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்ட உள்ளன.
இந்த கட்டிட தொகுதிகளின் நிர்மாணப் பணிகளுக்கு முப்படைகளிலிருந்து படைவீரர்கள் ஆளனியிராக செயற்படுத்தப்படுவார்கள்.
இவற்றினூடாக ஒரே சந்தர்ப்பத்தில் 60 கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்துக்கொள்ள முடியும்.
2000 கைதிகளை பராமரிக்க தேவையான வசதிகளுடன் கூடிய 20 கட்டிடங்களை வீரவில பகுதியில் நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் போதைப்பொருள் அச்சுறுத்தல் முற்றாக இல்லாதொழிக்கப்படும்.
மோசமான பாதாள உலக செயற்பாட்டாளர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக ஒரு சில அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணியதால் அதிகபட்ச பாதுகாப்பான சிறைச்சாலைகளை நாம் உருவாக்கியுள்ளோம் என்றார்.