அம்பலாங்கொடையில் கிராமிய வங்கியில் கொள்ளை: கைதான விமானப்படை சிப்பாயிடமிருந்து கைகுண்டுகள் மீட்பு

(செ.தேன்மொழி)
அம்பலங்கொட பகுதியில் கிராமிய வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அம்பலங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பே பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கியொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தது. இனந்தெரியாத நபரொருவர் வங்கியின் முகாமையாளரை கைகுண்டு மற்றும் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் உடனே சந்தேக நபரை மடக்கிப்பிடித்திருந்தனர். இவ்வாறு பணத்தை கொள்ளையிட்ட நபர் சீனக்குடா விமானப்படை முகாமின் சிப்பாய் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் , அவரிடமிருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கைக்குண்டுகள் இரண்டு , விளையாட்டு துப்பாக்கி மற்றும் கொள்ளையிட்ட பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
அம்பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.