முதல் நாளில் 5286 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது : எவ்வித பக்கவிளைவுகளும் இல்லையாம்

இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
முதலாம் நாளான இன்று 2280 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேச வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அத்துடன் இன்று முதல் நாளில் 5286 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1886 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 803 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியாலையில் 781 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் பனாகொட இராணுவ முகாமில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 382 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் ஹோமாகம வைத்தியசாலையில் 190 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் முல்லேரியா வைத்தியசாலையில் 108 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் 80 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் வெலிசற கடற்படை முகாமில் 56 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை ஏற்றப்பட்ட கொரோனா தடுப்பூசிகளால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அங்கொடை தேசிய தொற்று நோய் வைத்தியசாலை (ஐ.டி.எச்.) , கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நாரஹேன்பிட்விலுள்ள இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கும் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தலைமையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வில் அந்த வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த அபேவிக்கிரம முதலாவதாக தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.
அதனையடுத்து வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதியான சம்பிகா ஷீதானி உடுகமகோரலவிற்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி வைத்தியர் ராசியா பென்சே, கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா , சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர , ஐ.டி.எச். வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தனாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே வேளை இன்று காலை நாரஹேன் பிட்டவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது இராணுவ சிப்பாய்கள் மூவருக்கு ஒரே சந்தர்ப்பத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
தடுப்பூசி வழங்கலின் தொடர்ச்சியாக இன்றைய தினம் 6 பிரதான வைத்தியசாலைகளில் சுமார் 2000 பேருக்கு தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவிலையிலுள்ள கொழும்பு தெற்று ஆதார வைத்தியசாலை, ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு ஆதார வைத்தியசாலை, முல்லேரியா மற்றும் ஹோமாகம பிரதான வைத்தியசாலை ஆகியவற்றிலேயே இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.