தொடர் சங்கிலி அறுப்புடன் தொடர்புடைய இருவர் கைக்குண்டுடன் கைது
1 min read
Published by T. Saranya on 2021-01-29 14:56:19
வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, றம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த சங்கிலிகளை அறுத்து சென்றிருந்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்திருந்தனர்.
குறித்த முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை நேற்று காலை கைது செய்திருந்ததுடன், அவர்களது உடமையில் இருந்த கைக்குண்டு, மற்றும் வாகன இலக்கத்தகடுகளையும் மீட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அறுக்கப்பட்ட தங்க நகைகள் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் வழிகாட்டலில் சாயன்களான திசாநாயக்க, விக்கிரமசூரிய, குமணசேகர,சதுரங்க, கான்ஸ்டபிள்களான தயாளன், ரணசிங்க, தம்மிக, சமீர, மொறவக்க, அமரசூரிய ஆகியோர்களை கொண்ட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.