இலங்கை மீது இந்தியா அழுத்தம் பிரயோகிப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்திய முஜிபுர்!

2010 – 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைக்குள் சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பினை ராஜபக்ஷாக்கள் ஏற்பத்திக் கொடுத்தமையினாலேயே தற்போது இந்தியாவும் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஏதுவான காரணியாக அமைந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிழக்கு முனைய விவகாரத்திற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சாரா என்ற பெண் இந்தியாவில் இருக்கின்றமைக்கும் ஏதேனும் தொடர்புகள் காணப்படுமா என்ற சந்தேகம் எழுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கவில்லை என்று அரசாங்கம் கூறினாலும் இந்தியாவிலுள்ள அதானி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அரசாங்கம் கிழக்கு முனையத்தை தமக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பிரதிபலனாக ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களது ஆசனங்களிலிருந்து இறங்கி மதகுருமார்களை தேடிச் சென்று நிலைமை குறித்து விளக்கமளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2010 – 2015 ஆம் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இலங்கையில் சீனா ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதிகளவான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது.
2012 இல் கொழும்பு துறைமுகத்திலுள்ள சி.ஐ.சி.டி. முனையத்தின் 85. வீதத்தை சீனாவுக்கு வழங்கியதால் அதன் திறப்பு விழாவின் போது இலங்கையின் தேசிய கொடியை கூட ஏற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இவ்வாறு சீன ஆதிக்கத்திற்கு ராஜபக்ஷாக்கள் இடமளித்தமையின் காரணமாக இந்துமா சமுத்திரத்தில் வலய நாடுகளுடன் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதால் எமக்கும் ஒருபங்கை வழங்குங்கள் என்று இந்தியா அழுத்தம் பிரயோகிக்கிறது.
இந்தியா இலங்கை மீது இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததும் ராஜபக்ஷாக்களே.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சாரா என்ற பெண் இந்தியாவிலிருக்கிறார்.
ஆனால் அரசாங்கம் இதுவரையில் அவரை ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கேட்கவில்லை. கிழக்கு முனைய விவகாரத்தை இதனுடன் தொடர்புபடுத்தி இந்தியாவுடன் ஏதேனும் இரசகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.
அவரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் கேட்டுகுமாறு உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடமும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.