வட மாகாணத்திற்கு 10 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் தேவை – வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்
1 min read
Published by T. Saranya on 2021-01-27 16:41:05
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் தேவை என கோரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு வடமாகாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவேண்டிய சுகாதாரத் துறையினரின் விவரங்களை சுகாதார அமைச்சுக் கேட்டிருந்தது.
அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.
அவர்களுடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.