ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் எடப்பாடி ; மலர் தூவி மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018ம் ஆண்டு மே 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.
இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் சாரை சாரையாக அணிவகுத்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.