குருந்தூர் மலையில் ஏறும்போது ஓம் நமசிவாய கூட சொல்ல இராணுவம் அனுமதி மறுப்பு
1 min read
Published by T. Saranya on 2021-01-27 21:16:15
கே .குமணன்
வடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று புதன்கிழமை முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு சென்ற போது, அவர்களை இரண்டு மணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை வித்தித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.
இன்று (27.01.2021) மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் குருந்தூர் மலைக்கு சென்றனர். அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த குழு காக்க வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலைக்கு செல்ல இராணுவத்தினர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதாவது மலையில் தேவாரம் பாடமுடியாது , பூசை செய்யமுடியாது , கற்பூரம் கொண்டு செல்ல முடியாது ,பூக்கள் கொண்டு செல்லமுடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோடு மலையில் ஏறும்போது “ஓம் நமசிவாய ” என ஒரு பக்தர் கூறிய போது படையினர் அதற்கு அனுமதிக்காது அவ்வாறு எதுவும் சொல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளனர்.
வந்தவர்களை சிவசேனை அமைப்பினரா என இராணுவத்தினர் விசாரணை செய்தனர். அங்கு சென்றவர்கள் அதை மறுத்து, சிவசேனையினர் வரவில்லையென்றனர். ஊடகவியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்தினர்.
வருகை தந்த அனைவரது பெயர், அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனைவரும் மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.புலனாய்வாளர்கள் ,இராணுவம் சேர்ந்து வந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.
கடந்த வாரம் முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடையில்லை எனவும் அங்கு சூலம் உடைக்கப்படவில்லையெனவும் பக்தர்கள் அங்கே சென்று தடையின்றி வழிபடலாம் எனவும் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.