இந்திய மீனவர்களுடன் இலங்கை தமிழரும் உயிரிழப்பு; தமிழகத்தில் பச்சிளம் குழந்தையும் தாயும் தவிப்பு

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழரான மீனவர் ஒருவர் சமீபத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அவரின் மனைவி மற்றும் 20 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ள்து.
கடந்த 18ஆம் திகதி தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து சென்ற இவர்கள், அன்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் வலைகளை பாய்ச்சி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் மாயமான மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்த குறித்த மீனவர்கள் , இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
உயிரிழந்த நால்வரில் ஒருவரான சாம்சன் டார்வின், இலங்கைத் தமிழர். 2009ஆம் ஆண்டு அவர் தமிழகம் வந்துள்ளார். அங்கு இலங்கை தமிழர்கள் முகாமில் வந்து தங்கிய அவருக்கும், அதே முகாமை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரும் கடந்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் டார்வின் – விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்த நிலையில் தந்தை டார்வின் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் மரணத்தால் வேதனையில் கதறிதுடிக்கும் விஜயலட்சுமியின் புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை கலங்கவைத்துள்ளது.