விவசாயிகளின் போராட்டத்தில் தடியடி, கண்ணீர்புகைக் குண்டு வீச்சு: செங்கோட்டை முற்றுகை – குடியரசு தினத்தில் இந்தியாவில் ரணகளம்
1 min read
Published by T. Saranya on 2021-01-26 15:43:05
இந்தியாவின் சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகளின் பேரணியில் பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியை பொலிஸார் திடீரென தடுத்ததால், சலசலப்பு ஏற்பட கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதுடன் தடியடிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை உழவு இயந்திர பேரணி நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு எல்லையில் இருந்து பேரணியை ஆரம்பித்தனர்.
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரை பேரணி வந்தடைந்தபோது, விவசாயிகள் ரிங் ரோடு வழியாக செல்ல முயன்றனர். ஆனால் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
45 நிமிடங்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு விவசாயிகள் நேரம் கொடுத்தனர். இந்த வீதியால் பேரணியை அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகள் பொலிஸ் பாதுகாப்பு வாகனம் மீது ஏறினர். இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கும் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
டெல்லி எல்லையில் விவசாயிகள் உழவு இயந்திரப் பேரணியை நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென உழவு இயந்திரத்துடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர்.
பொலிஸார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பொலிஸார் தடியடியும் நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர்.
இதற்கிடையில், விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர். அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார்.