நாளை சிறையிலிருந்து வெளிவருகின்றார் சசிகலா!
1 min read
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் திக தி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து பிப்ரவரி 15 ஆம் திகதி தேதி முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கடந்த நவம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.
இதை தொடர்ந்து அவரின் தண்டனைக் காலம் நாளையுடன் நிறைவடைவதாக சிறைத்துறை அறிவித்தது.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அங்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா வெளியிட்ட அறிவிப்பில்,
‘சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கியுள்ளன. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து கொரோனா வார்டுக்கு அவரை மாற்றியுள்ளோம். எனினும் அவர் முழுவதும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வர ஒருவார காலம் தேவைப்படலாம்’ என தெரிவித்துள்ளார்.