கொழும்பில் கொரோனா தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை உரியோர் அறிவிக்க வேண்டும்!
1 min read
நான் தற்போது கொழும்பில் இருக்கிறேன். இங்கு வந்து கிழமைகள் கடந்து செல்கின்றன. கொழும்பில் முற்று முழுதாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு வழமைபோல நாளாந்த செயற்பாடுகள் அனைத்தும் நடைபெறுகின்றன.
ஆனாலும் இங்கு ஒரு வித காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.
அது கொரோனா தொற்றோடு தொடர்பான காய்ச்சலா அல்லது வேறு ஏதும் வைரஸ் காய்ச்சலா என்பதை அறிய முடியவில்லை.
புறக்கோட்டை மற்றும் கொழும்பு நகர பகுதிகளில் Antigen or பிசிஆர் பரிசோதனை மக்கள் மத்தியில் எடுக்கப்படுவதை நான் காணவில்லை.
இருந்தும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் எடுக்கப்படுகின்ற பரிசோதனை முடிவுகளின் படி கொழும்பில் தொற்று அதிகரித்து செல்வதாக இன்றைய நாளின் அரச தகவல்கள் கூறுகின்றன.
காத்தான்குடியில் கொரோனா இல்லை. வெளியூரில் இருந்து வருபவர்களே கொரோனாவை ஊருக்கு கொண்டு வருகிறார்கள் எனும் கதை இருக்கிறது. அது உண்மையாகவும் இருக்கிறது.
கொழும்பில் இருக்கின்ற நான் ஊருக்கு இச் சமயத்தில் வருவது நீதமானதாக இல்லை என்பதால் நான் ஊருக்கு வருவதை தவிர்த்து வருகிறேன். என்னை போல பலர் இங்கு தவிர்த்து வருகிறார்கள்.
ஆனாலும் ஊரில் ஊரடங்கு எடுக்கப்பட்ட பிற்பாடு சிலர் கொழும்பில் இருந்து ஊருக்கு சென்றுள்ளதாக அறிகிறேன்.
அதே போல ஊரில் இருந்து வியாபார நோக்கோடு பலர், ஊரில் பகுதியளவு ஊரடங்கு எடுக்கப்பட்டு இரண்டு தினங்களும் கடந்திடாத நிலையில் கொழும்புக்கு வருகை தந்துள்ளதை இன்று அவதானிக்க முடிந்தது.
இன்று கொழும்பு முக்கிய வீதி அமானா வங்கிக்கு தேவை நிமிர்த்தம் சென்ற போது, அங்கு நான் கண்ட முகங்கள் எமது முக்கிய வீதி பெரிய கடை முதலாளிமார்களின் முகங்களாகவே இருந்தன.
தொழில் செய்ய வேண்டும் தான். இருந்தும் குறித்த காலப்பகுதிக்கு ஏற்றாற் போல தொழிலை கொண்டு செல்ல, தமக்கு தேவையான பொருட்களை ஊரில் இருந்து கொண்டே காலடியில் பெற்றுக் கொள்ள பல நவீன வசதிகள் இருக்கின்றன.
இருந்தும் இவைகளை தவிர்த்து வசதி படைத்த உள்ளங்கள் மேலும் தமது செல்வத்தை பெருக்கிக் கொள்ள இங்கு வந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு இரண்டு நாளும் கொழும்பு சாப்பாட்டுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஊர் திரும்ப இருக்கும் முகங்கள் அவை.
இவ்வாறான நிலையில் வெளியூரில் இருந்து ஊர் வருவோர் தொடர்பில் நகர சபை மற்றும் MOH இன் நிலைப்பாடு என்ன?
அவ்வாறானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்படுவார்களா இல்லையா?
வெளியூர்களில் இருந்து ஊருக்கு, ஊரில் இருந்து வெளியூருக்கு போய் வரலாமா? இல்லையா?
குறித்த விடையத்தில் அவருக்கொரு சட்டம் இவருக்கொரு சட்டம் என்றில்லாமல் தெளிவான நிலைப்பாட்டை உரிய தரப்பினர் அறிவிக்க வேண்டும். அது எம்மை போன்று ஊர் நலனை பேணி நடப்போருக்கும் பயன்தரும்.
உரியோர் தெளிவுபடுத்தினால் பலருக்கும் பயனாக இருக்கும் என கொழும்பில் வாசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.