கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் வெள்ளி முதல் ஆரம்பம்
1 min read
Published by T. Saranya on 2021-01-26 22:24:26
(எம்.மனோசித்ரா)
இந்தியாவின் தடுப்பூசிகள் நாளை மறுதினம் நாட்டை வந்தடைந்தவுடன் வெள்ளிக்கிழமை முதல் அதனை வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
இதேவேளை சீனா அரசாங்கம் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினோபோம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது என்று கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முதற்கட்டமாக நேரடியாக சுகாதாரத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் அடுத்தடுத்து ஏனையோருக்கும் வழங்கப்படும். ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோரை ஒரு இடத்தில் வரவழைத்து வழங்க முடியாது. எனவே சுகாதார அமைச்சினால் 1,050 வைத்தியசாலைகள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 950 வைத்தியசாலைகளில் சிறந்த வசதிகளையுடையவையாகும்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியும் , சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோபாம் தடுப்பூசியையும் எதிர்வரும் தினங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
சீனா 3 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதிக்கமையவே எந்தவொரு தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டு வர முடியும். சிறந்த மதிப்பீடுகளின் பின்னரே இந்தியாவின் தடுப்பூசிக்கும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதியளித்துள்ளது. தடுப்பூசிகளை வழங்கும் செயற்திட்டம் அடுத்தடுத்த மாதங்களுக்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதமானோருக்கு அதாவது 130 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். எஞ்சியுள்ள 35 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்குவது சிக்கலாகும். காரணம் அந்த 35 வீதத்திற்குள் சிறுவர்கள் , கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் உள்ளிட்டோர் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு உடனடியாக தடுப்பு மருந்தளிக்க முடியாது. எனவே திட்டமிட்டுள்ள படி 65 வீதமானோருக்கு நிச்சயம் தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.