கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் நுழைந்த கால்நடைகளால் உரிமையாளருக்கு நேர்ந்தகதி!
1 min read
கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக மாட்டின் உரிமையாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.
கால்நடைகளின் உரிமையாளரான அழகராஜா ராஜரூபன் என்பவரையே இவ்வாறு இராணுவத்தினர் தாக்கியுள்ளதாக கூறபப்டுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கூறுகையில்,
வழமைபோன்று நேற்றைய தினம் (25) பசுமாடுகளை மேய்ச்சல் முடிந்து பட்டிக்கு அடைப்பதற்காக கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள வீதியால் கலைத்து சென்ற வேளை முன்னால் சென்றுகொண்டிருந்த மாடுகள் கேப்பாபுலவு கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் வேலியின் உட்புறத்தில் உள்ள புற்களை வேலிக்குள்ளால் தலையை நுழைத்து மேய்ந்ததோடு வேலியை அறுத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளன.
அதன் பின்னால் மாடுகளை மேய்த்துக்கொண்டு வீதியால் வந்துகொண்டிருந்த என்னை அழைத்த இராணுவம் உனது மாடுகளா இவை என கேட்டார்கள். எனது மாடுகள் தான் என கூறியதும் வேலியை வெட்டி உள்ளே மாடுகளை விடுகின்றாயா? என கேட்டு என்னை தாக்கியத்துடன் எனது கழுத்தை பிடித்து நெரித்து திருகியதுடன் கையில் வைத்திருந்த பொல்லுகளாலும் என்னை தாக்கினார்கள்.
அதன்பின்னர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்து அங்கிருந்து வந்த வாகனத்தில் இராணுவத்தினர் 20 பேருக்கு மேற்பட்டோர் என்னை வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் தூக்கி எறிந்தனர்.
பின்னர் இராணுவ பொலிஸார் சிலரும் பொலிஸாரும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டதோடு நான் வேலி கம்பிகளை வெட்டியே மாடுகளை உள்ளே விட்டு மேய்த்ததாகவும் இனிமேல் மாடுகளை உள்ளே விட்டால் மாடுகளையும் வேலிக்கு அண்மையாக நீ வந்ததால் உன்னையும் சுட்டு கொன்றுவிட்டு அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்ததாக சொல்லுவோம் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இதை எல்லாம் வெளியில் ஊடகங்களிடம் சொல்ல கூடாது எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து இரவு என்னை விடுவித்தனர்.
இன்றுவரை இராணுவ முகாமுக்குள் சென்ற மாடுகள் பல இன்னும் வெளியில் விடப்படவில்லை, மாடுகள் உள்ளே நிற்பதால் கன்றுகள் இராணுவ முகாமை சுற்றியே கத்திக்கொண்டு நிற்கின்றன. இந்நிலையில் எனக்கு இராணுவ முகாமுக்கு அண்மையாக சென்று மீதமுள்ள மாடுகளை மேய்க்க பயமாக இருக்கிறதாகவும் தாக்கபப்ட்ட குறித்த நபர் கூறியுள்ளார் .
அத்துடன் வீதியின் அருகே அங்கங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கே இருக்கும் இராணுவத்தை மீறி என்னால் எப்படி வேலியை வெட்டி உள்ளே விடமுடியும் ? இராணுவம் முகாமை சுற்றி CCTV கமெராக்களை பொருத்தியுள்ளது. அதை வேண்டுமானால் அவர்கள் சோதித்து உண்மையை அறியட்டும்.
இராணுவம் என்னை தாக்கியதில் கழுத்து பகுதியிலும் கை பகுதியிலும் நகங்களால் கீற பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு பல இடங்களில் கண்டல் காயங்களும் ஏற்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்ட நான் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாத நிலையில் மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் அவற்றை பராமரித்து வரும் நிலையில் இராணுவம் இவ்வாறு என்னை தாக்கியதோடு இராணுவ முகாமுக்கு உள்ளே சென்ற மாடுகளை இன்னும் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளனர்.
எனக்கு இராணுவத்தினரிடமிருந்து இனி வரும் நாட்களில் பாதுகாப்பு அச்சம் இருப்பதோடு இராணுவம் வைத்துள்ள மாடுகளையும் வெளியில் விடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை கேப்பாபுலவு கிராமத்தில் ஒரு பகுதி ஏற்கனவே மக்களின் தொடர் போராட்டம் காரணமாக விடுவிக்கபட்டுள்ள நிலையில், மக்களின் குடியிருப்புகள் அடங்கிய கிராமத்தின் மறுபகுதி பூரணமாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.