சங்கிலி அறுத்து கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்த நபர் புலனாய்வு பொலிஸாரால் கைது
1 min readPublished by T. Saranya on 2021-01-25 17:39:58
(எம்.நியூட்டன்)
கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகளிடம் சங்கிலியை கொள்ளையிட்ட இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை சனிக்கிழமை மாலை அறுத்துச் சென்ற இளைஞன், அதனை விற்றுவிட்டு சுமார் 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியிலான இரண்டு அலைபேசிகளை வாங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் வயோதிப் பெண்ணும் அவரது மகளும் சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளிலில் பயணித்துள்ளனர். அவர்களை பின்தொடர்ந்த ஒருவர் தாயாரின் கழுத்திலிருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டது. அதுதொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி, விசாரணைகளை முன்னெடுத்தார். சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள சி.சி.ரி.வி பதிவின் அடிப்படையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
கொக்குவிலைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டார். அவரது உடமையில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய அதிதிறன் அலைபேசிகள், 90 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன.
சங்கிலியை விற்பனை செய்து அலைபேசிகள் இரண்டையும் சந்தேக நபர் வாங்கியுள்ளார். அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.