February 28, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

உடைகிறதா தமிழ் முற்போக்கு கூட்டணி? மனோகணேசன் பதிவு

தமிழ் முற்போக்கு கூட்டணி உடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த அதன் தலைவர் மனோ கணேசன் அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழநி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வெ.இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி என ஓரணியாக செயற்பட ஆரம்பித்தனர்.

கடந்த நல்லாட்சி காலத்தில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் ஒரு ராஜாங்க அமைச்சர் என பலமான அமைப்பாக பல பணிகளை முன்னெடுத்த கூட்டணியாகவும் திகழ்ந்தது.

பின்னர் 2020 ஆண்டு தேர்தலிலும் மீண்டும் ஆறு உறுப்பினர்களைப் பெற்று த.மு.கூ தனது பலத்தை தக்கவைத்துக்கொண்டது. எனினும் தேசிய பட்டியல் விவகாரத்துடன் முதலாவது சறுக்கல் ஆரம்பித்தது. அதுவரை முன்னிலையில் இருந்து செயற்பட்ட கூட்டணியின் நிதிச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் கூட்டணியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் 20 வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து கூட்டணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஆளும் கட்சி பக்கம் தாவிய நிலையில் பாராளுமன்றில் கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை 5 ஆக குறைவடைந்தது.

இதனையடுத்து அரவிந்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கூட்டணி மலையக மக்கள் முன்னணியினரைக் கோரியபோதும் அதனை கணக்கில் எடுக்காத அரவிந்தகுமார் அது ஒரு ‘பம்மாத்து கூட்டணி’ என கூறி வாளாவிருந்தார்.

அதேநேரம் மலையக மக்கள் முன்னணியும் அரவிந்தகுமாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதுபோல் பாசாங்கு செய்த நிலையில், அரவிந்தகுமார் தொடர்ந்தும் மலையக மக்கள் முன்னணியிலேயே இருப்பார் என கூறப்பட்ட நிலையில் முன்னணி அதனை மறுக்கவுமில்லை.

கூட்டணியின் கோரிக்கையை முன்னணி நிறைவேற்றவில்லை என்ற நிலை உருவாதனால் மலையக மக்கள் முன்னணிக்கு எதிரான நிலைப்பாட்டை தொழிலாளர் தேசிய சங்கம் பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிட்டதுடன் பதுளையில் தனித்து களம் இறங்கும் என கூறியது.

இதனால் தொழிலாளர் தேசிய சங்கமும் ஜனாநாயக மக்கள் முன்னணியும் ஓரணியாக தொடர்ந்து செயற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு இன்னுமொரு சிக்கல் உள்ளதாக அறிய முடிகிறது.

கூட்டணிக்கு ஒரு தலைமையகக் கட்டடம் அமைப்பது என தீர்மானித்திருந்த நிலையில் அதனை தலைநகரம் கொழும்பில் அமைக்காது ஹட்டன் நகரை அண்டியாதாக அமைப்பது தொடர்பில், கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரிதித் தலைவர் திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தகைய ஒரு கட்டடம் அமைப்பதற்கான காணியை தான் அமைச்சராக இருந்த காலத்தில் திகாம்பரம் பெற்றுக் கொடுத்ததால் அவர் அதனை தனது அரசியல் வசதிக்கு ஏற்ப அமைத்துக்கொண்டதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தவிரவும் தேர்தல் காலத்தில் தொலைபேசியில் வாக்கு வாங்கிக் கொண்டு மொட்டுக்குத் தாவி அமைச்சுப் பதவி பெறும் யோசனையில் திகா, ராதா இருவரும் இருந்ததுடன் , தானே தொடர்ந்தும் அமைச்சர் என திகாம்பரம் வெளிப்படையாகவே கூட்டங்களில் பேசி வந்தார்.

20க்கு ஆதரவாக வாக்களிக்க இராதாவும் அரவிந்தகுமாரும் ஒன்றாகவே இணைந்து அரசுடன் இணையும் முடிவை எடுத்துள்ளனர். 52 நாள் அரசாங்க காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சென்றது நினைவில் இருக்கலாம்.

ஆனால் பேச்சுவார்த்தைகளில் இராதாவுக்கு அமைச்சுப் பதவி இல்லை என்றதும் அவர் பின்வாங்கவே முன்வைத்த காலை பின்வைக்காமல் அரவிந்தகுமார் அரசுடன் சேர்ந்துவிட்டார்.

அதனால்தான் இராதாகிருஷ்ணன் தலைவராக அரவிந்தகுமார் மீது தீவிரமாக ஒழுக்காற்று நடவடிக்கை என இறங்கவில்லை எனவும் கூட்டணி வட்டாரங்களில் கதை அடிபடுகிறது.

இத்தகைய உள்முறுகல்களுக்கு மத்தியிலேயே கூட்டணி தலைவர் மனோ கணேசன் ” தமிழ் முற்போக்கு கூட்டணியை பிளக்கும் எவரையும் நான் மன்னிக்கமாட்டேன்” என தனது முகநூலில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.