March 1, 2021

Vision Tamil

Srilanka's Genuine News Source

இன்று இலங்கை ஊடக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினம்!

1 min read

இன்று இலங்கை ஊடக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினம்.

இதே நாள் தான் 2006 ஆம் ஆண்டு ஊடகர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட நாள்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்து பொலிசார் எழுதிய புனைகதையை வெளிச்சம் போட்டுக் காட்டிய குற்றத்துக்காகக் கொல்லப்பட்டு விட்டார்.

இவர் இறக்கும் போது 36 வயது, இரண்டு பிள்ளைகளின் தந்தை.

இரண்டாவது 2010 ஆம் ஆண்டில் இதே நாள் பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) என்ற ஊடகர் காணாமல் போய் இன்னமும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இறுதிக் கட்ட ஈழப் போரில் மக்கள் மீது இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பாவித்துக் கொன்றதை வெளிச்சம் போட்டுக் காட்டியது தான் இவர் செய்த குற்றம்:

இலங்கையில் ஊடகர் என்றால் அது தமிழரோ, சிங்களவரோ இரு சமூகமும் பொதுமை என்ற அளவில் தான் இந்த அரசியல் பழிவாங்கல்கள் இருக்கின்றன.

90 இல் ஊடகர் ரிச்சர்ட் டி சொய்சாவில் படுகொலை நிகழ்ந்த போது எழுந்த பேரதிர்ச்சியோடு தொடர்ந்தன ஊடகர் படுகொலைகள்.

இன்னமும் அச்சப்பட்ட சூழலில் எஞ்சியிருப்போர் தவிர பலர் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள்.

எமது சுய நிர்ணயத்தை நோக்கிய போராட்டம் இன்று காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துத் தா என்று வருடக் கணக்காகக் கெஞ்சிக் கொண்டிருப்பதிலும், புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் புத்தர் சிலைகள் மீதுமாகத் திரும்பி விட்டது.

இந்த 2009 இலிருந்து 2021ஆம் ஆண்டுக்கு ஒரு வட்டம் அடித்துப் பார்த்தால் மீண்டும் பழைய புள்ளிக்கே வந்திருக்கிறது இப்போதுள்ள இலங்கை அரசியல் சூழல் என்பதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.