இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்; கருத்து தெரிவிக்க இலங்கை அதிகாரிகள் மறுப்பு

நான்கு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டமை குறித்து இலங்கை இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றின் கீழ் வருவதால் தன்னால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை சட்டமாஅதிபர் திணைக்களமும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது நிலைப்பாடு காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மீனவர்கள் உயிரிழந்தமை மிகவும் துன்பகரமான சம்பவம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
இருநாடுகளினதும் மீனவசமூகத்தின் வாழ்வதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த விவகாரத்தை மேலும் பிரச்சினைக்குரியதாக மாற்றாமல் உடனடியாக இதற்கு தீர்வை காணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் பல பேச்சுவார்த்தைகள் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீர்வை காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.